திருப்பூர் அருகே அலகுமலை ஜல்லிக்கட்டில் 523 காளைகள் சீறிப்பாய்ந்தன 45 பேர் காயம்


திருப்பூர் அருகே அலகுமலை ஜல்லிக்கட்டில் 523 காளைகள் சீறிப்பாய்ந்தன 45 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-04T01:13:23+05:30)

திருப்பூரை அடுத்த பொங்கலூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 523 காளைகள் சீறிப்பாய்ந்தன. போட்டியின் போது அடங்க மறுத்த காளைகளை, வீரர்கள் அடக்க துடித்தனர். இதில் 45 பேர் காயம் அடைந்தனர்.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் 2–வது ஆண்டாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு இதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி வரவேற்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

வாடிவாசலுக்கு பூஜை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வந்த மாடுகளுக்கு 40 டாக்டர்கள் கொண்ட 7 மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்பிவைத்தனர். முதலில் கோவில் காளை அழைத்து வரப்பட்டது. அது மைதானத்தில் மண்டியிட்டு அனைவருக்கும் வணக்கம் செலுத்தியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 523 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன.

காளைகளை அடக்க 600 வீரர்கள் வந்திருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். மாடு பிடி வீரர்களை பிரித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு அணியினர் என அனுமதிக்கப்பட்டு போட்டி நடந்தது. அவர்களுக்கு ஒரே நிறத்தில் சீருடை கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியிலும் அதிக காளைகள் பிடித்த வீரர்கள் இறுதி சுற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

6–வது முறையான இறுதி சுற்றின் போது சீறி வந்த காளைகளை, காளையர்கள் சீற்றத்தோடு அடக்க முயன்றனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினார்கள். சில காளைகள் வீரர்களின் பிடிக்குள் சிக்காமல் பாய்ந்தன. மேலும் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் தூக்கி வீசி பந்தாடி சென்றன. இருப்பினும் வீரர்கள் சிறிதும் சளைக்காமல் காளைகளை அடக்கினார்கள். சில காளைகளின் பெயரை அறிவித்தவுடன் வீரர்கள் தடுப்பு கம்பியின் மேல் தாவி ஏறிக்கொண்டனர்.

வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்க பாய்ந்தனர். பார்வையாளர்கள் விசில் அடித்தும், கரகோ‌ஷம் எழுப்பியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், எவர்சில்வர் அண்டா, கட்டில், பீரோ உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

பரபரப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 45 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த 30 டாக்டர்கள், 70 உதவியாளர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். 13 நடமாடும் மருத்துவக்குழுவும், 6 ஆம்புலன்சுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இதில் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 6 பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 2 பேரும் அனுமதிக்கப்பட்டனர். காயம்பட்டவர்களில் 3 பார்வையாளர்கள், ஒரு மாட்டின் உரிமையாளரும் அடங்குவார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இதில் போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), தனியரசு(காங்கேயம்), முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மத்திய கண்காணிப்புக்குழு மற்றும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர் எஸ்.கே.மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சிவாசலம், அ.தி.மு.க. மாணவர் அணி மாவட்ட செயலாளர் அன்பகம் திருப்பதி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க துணை தலைவர் மூர்த்தி, செயலாளர் தூரன்நம்பி, இணை செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி தலைவர் தனபால், செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார். போட்டியை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் நடத்தினார். சரவணன் போட்டியை தொகுத்து வழங்கினார்.

மாலை 4.30 மணிக்கு போட்டி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 8 மாடுகளை பிடித்த மதுரை மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், 6 மாடுகளை பிடித்த மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு 2–வது பரிசாக எல்.இ.டி. டி.வி.யும், தலா 5 மாடுகளை பிடித்த மதுரை சக்திவேல், நத்தம் கார்த்திக்குமார் ஆகியோருக்கு 3–வது பரிசாக தலா ஒரு பீரோவும் வழங்கப்பட்டது.

சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. அதில் சேலம் மாவட்டம் ஏத்தாபூரை சேர்ந்த சாரதி என்பவரின் மாட்டுக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், ஜல்லிக்கட்டுப்பேரவை மாநில தலைவர் மதுரை பி.ராஜசேகர் என்பவரின் மாட்டுக்கு 2–வது பரிசாக மோட்டார் சைக்கிளும், மதுரை அண்ணா நகரை சேர்ந்த பிரேம் என்பவரின் மாட்டுக்கு 3–வது பரிசாக பீரோவும் வழங்கப்பட்டன.


Next Story