லாஸ்பேட்டையில் துப்பாக்கியுடன் நள்ளிரவில் சுற்றும் வடமாநில வாலிபர்கள் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு


லாஸ்பேட்டையில் துப்பாக்கியுடன் நள்ளிரவில் சுற்றும் வடமாநில வாலிபர்கள் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-04T01:43:36+05:30)

புதுவை லாஸ்பேட்டையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் சுற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த 26–ந் தேதி தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள டாக்டர் வடிவேலு வீட்டில் 150 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம் காவேரி நகரில் நகைக்கடை ஊழியர் டொமினிக் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை போனது. இந்த கொள்ளை வழக்குகளில் இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதேபோல் லாஸ்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ பரவி வருகிறது. இதில் 2 வாலிபர்கள் மங்கி குல்லா, கையுறை அணிந்தபடி கையில் துப்பாக்கி, கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வேகமாக நடந்து செல்கின்றனர். இந்த காட்சி புதுவை லாஸ்பேட்டை குமரன் நகர் விரிவாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோவில் பதிவாகியுள்ள நபர்கள் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.


Next Story