வரலாற்று சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டி மலையில் திடீர் காட்டுத்தீ
வரலாற்று சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டி மலை மீது காட்டுத்தீ பரவியதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் 7 மலைகள் உள்ளன. இந்த மலைகளில் சமணர்கள் வாழ்ந்த இடங்கள், வட்ட வடிவ பிராமி கல்வெட்டு, எழுத்துக்கள், புத்தர், சமணர் சிலைகள், மலையை குடைந்து அமைக்கப்பட்ட லகுலீஸ்வரர், விநாயகர் சிற்பங்களுடன் பிரசித்தி பெற்ற குடவரை சிவன் கோவில் என பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலைகளில் நேற்று இரவு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. மலை மீது காட்டுத்தீ பரவியதை பார்த்த அரிட்டாபட்டி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே மேலூர் தீயணைப்பு நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மலையில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அரிட்டாபட்டி ஏழு மலைகள் பாதுகாப்பு குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், அரிட்டாபட்டி மலையில் பரவி வரும் தீயில் புராதன சின்னங்கள் மற்றும் பறவையினங்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. தீயை அணைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.