மத்திய அரசின் ஆதார விலையில் துவரை கொள்முதல் - கலெக்டர் தகவல்


மத்திய அரசின் ஆதார விலையில் துவரை கொள்முதல் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2019 3:30 AM IST (Updated: 4 Feb 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி, 

வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயறு வகை பயிர்களில் குறிப்பாக துவரைக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் அவற்றை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் விலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடப்பு 2018-19-ம் ஆண்டு பயறு வகை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் தேனி மாவட்டத்தில் துவரை கொள்முதல் செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி மாவட்டத்தில் 650 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. துவரை ஒரு கிலோவுக்கு 56 ரூபாய் 75 காசுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. துவரை கொள்முதல் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது.

மாவட்டத்தில் தேனி விற்பனைக்குழு முதன்மை கொள்முதல் முகமையாகவும், சின்னமனூர், போடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையமாகவும் செயல்படும். இக்கொள்முதல் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வகையில் துவரையை சுத்தம் செய்வது அவசியமாகும்.

துவரையின் எடையில் அயல் பொருட்கள் 2 சதவீதமும், கலப்பினம் 3 சதவீதமும், சேதமடைந்த பயறுகள் 3 சதவீதமும், குறைவாக சேதமடைந்த பயறுகள் 4 சதவீதமும், முதிர்ச்சியடையாத பயறுகள் 3 சதவீதமும், பூச்சி தாக்கிய பயறுகள் 4 சதவீதமும் மட்டுமே இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்கும் வகையில் உலர வைக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் சின்னமனூர், போடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story