கிராமங்களில் வீடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


கிராமங்களில் வீடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டம் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் ஆதரவில்லாமல் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

மாவட்ட பொது சுகாதாரத்துறையின் தேசிய நலவாழ்வு திட்டம் மூலம் உலக ஆதரவு சிகிச்சை தின சிறப்பு மருத்துவ முகாம் அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி கல்லூரியில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. சுகாதராத்துறை துணை இயக்குனர் யசோதாமணி வரவேற்றார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:– நவீன தொழில்நுட்ப உதவியுடன் பொது சுகாதாரத்துறையை உருவாக்கி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றித் தந்தவர் ஜெயலலிதா. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக்கட்டத்தில் தான் எண்ணற்ற திட்டங்கள் பொது சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு உயிரிழப்பு குறைக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் முன்னேற்றம் அடைந்தது.

அந்த அளவிற்கு திறமை படைத்த மருத்துவர்கள் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவித் திட்டம், கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியுதவித் திட்டம், பள்ளி மாணவ–மாணவிகளுக்கு பள்ளிகளிலே சிறப்பு மருத்துவ முகாம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், ஆதரவற்ற ஏழை, எளியோர் ஆகியோர் நோயால் பாதிக்கப்பட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பல்நோக்கு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டி, இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் நாகநாதன், அரவிந்த் ஆதவன், முத்துராணி, ரெஜி, சுகாதார ஆய்வாளர் முருகேசன், சிவகங்கை தாசில்தார் ராஜா, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிக்குமார், பாண்டி, ஜெயப்பிரகாஷ், வெள்ளைச்சாமி, செல்லச்சாமி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story