நூதன முறையில் ஏ.டி.எம்.எந்திரங்களில் ரூ.1 கோடி திருடிய 2 கல்லூரி மாணவர்கள் கைது


நூதன முறையில் ஏ.டி.எம்.எந்திரங்களில் ரூ.1 கோடி திருடிய 2 கல்லூரி மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 4 Feb 2019 4:30 AM IST (Updated: 4 Feb 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ரூ.1 கோடி வரை திருடிய கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பெங்களூரு, கோவா, குருகிராம், போபால் ஆகிய இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாட்டை நன்கு அறிந்த மர்ம ஆசாமிகள், வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது பணம் வெளியே வரும் நேரத்தில் நின்று விடும்படி அந்த எந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் வாடிக்கையாளர் சென்றதும் அந்த பணத்தை வெளியே எடுத்து திருடி வந்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் வாலிபர்கள் 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தின் செயல்பாட்டில் குளறுபடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் மும்பையில் கைவரிசை காட்ட வருவதாக நாக்பாடா போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மும்பை வந்திருந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆசிப் கான் (வயது19), அரியானாவை சேர்ந்த அஸ்மத் கான் (21) என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

இருவரும் மேற்கண்ட இடங்களில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வரும் நேரத்தில் அது நின்று விடும் வகையில் செயல்பாட்டை மாற்றி அமைத்து ரூ.1 கோடி வரை திருடியிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் இருந்த 52 கடன் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story