காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு கோவில்களில் சமபந்தி விருந்து
காஞ்சீபுரத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
காஞ்சீபுரம்,
மறைந்த முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காஞ்சீபுரம் நகராட்சி முன்புள்ள அண்ணா சிலைக்கும், நகராட்சி அண்ணா அரங்கத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சீபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் பூக்கடை ஆர்.டி. சேகர், கூட்டுறவு உயர் அதிகாரி ஜி.சம்பந்தம், மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் மற்றும் பலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
காஞ்சீபுரம் நகராட்சி முன்புள்ள அண்ணா சிலைக்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், நகர செயலாளர் ஆறுமுகம், சி.வி.எம்.அ.சேகர், மாநில நெசவாளரணி நிர்வாகி அன்பழகன், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் கே.எம்.ஏகாம்பரம், அருள், மகேஷ் உள்பட பலர் மாலைகள் அணிவித்து வணங்கினார்கள். சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க.வினர் மாலைகள் அணிவித்தனர்.
அண்ணா நினைவுநாளையொட்டி, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன், அறநிலையத்துறை ஆய்வாளர் அலமேலு, மணியக்காரர் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெ.சுரேஷ்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலிலும், அண்ணா நினைவு நாளையொட்டி சமபந்தி விருந்து நடந்தது. இதில், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ, சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் உணவருந்தினர். பின்னர், கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் லோகமித்ரா, இந்து சமய அறநிலைய துறை உதவி இயக்குனர் ஜான்சிராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கோ.அரி எம்.பி. கலந்துகொண்டு சமபந்தி விருந்தை தொடங்கிவைத்தார். இதில் திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் சிவாஜி, நகராட்சி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன், கோவில் மேலாளர் பழனி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து கோவில் சார்பில் பெண் பக்தர்களுக்கு கோ.அரி எம்.பி. இலவச சேலைகள் வழங்கினார்.
Related Tags :
Next Story