சிதம்பரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு


சிதம்பரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Feb 2019 11:08 PM GMT (Updated: 3 Feb 2019 11:08 PM GMT)

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.

சிதம்பரம், 

விழுப்புரம் அருகே உள்ளது திருத்துறையூர். இங்குள்ள ரெயில் நிலையம் முன்மாதிரி ரெயில் நிலையமாக மாற்றப்பட இருக்கிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வருகிற 11-ந் தேதி வர இருக்கிறார். இதையடுத்து, இந்த பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு நடந்து வரும் பணிகளை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர், சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு தனி ரெயிலில் வந்தார். அங்கு நடைமேடை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பயணிகளுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் ரெயில் பயணிகள் காத்திருப்பு அறை, சுற்றுசுவர் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

அங்கிருந்த பணியாளர்களிடம் பணியை தரமாக செய்யுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆய்வு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து தனி ரெயிலில் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டார்.

இந்த ஆய்வின் போது, சிதம்பரம் ரெயில் நிலைய மேலாளர் கனகராஜ், ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர்கள் உள்பட ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story