நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கக்கூடாது


நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கக்கூடாது
x
தினத்தந்தி 3 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-04T04:53:38+05:30)

நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கக்கூடாது என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை புறம்போக்குகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நீர்நிலை புறம்போக்குகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை வருவாய் கணக்குகளின் மூலம் கண்டறிந்து அதனை பத்திரப்பதிவு துறைக்கும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கும், வாக்காளர் பதிவு அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளக்கூடாது. மின் இணைப்பையும் வழங்கக்கூடாது. மேலும் குடிநீர் இணைப்புகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, ஸ்ரீகாந்த், கோட்டாட்சியர் குமாரவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள் சீனிவாசன், ரத்தினமாலா, கடலூர் பேரூராட்சி உதவி இயக்குனர் இளங்கோவன், நகராட்சி ஆணையர்கள் லட்சுமி, பிரகாஷ், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story