சுற்றுலா சென்றபோது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை , அரசு உண்டு உறைவிட பள்ளி முதல்வர் கைது


சுற்றுலா சென்றபோது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை , அரசு உண்டு உறைவிட பள்ளி முதல்வர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2019 3:30 AM IST (Updated: 4 Feb 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா சென்றபோது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உண்டு உறைவிட பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மங்களா பகுதியில் ஹனூர் ரோட்டில் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான மத்திய அரசின் ஏகலவியா உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் லோகேஷ் (வயது 38) முதல்வராக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் 29 மற்றும் 30-ந்தேதி மாணவ-மாணவிகள் குடகு மற்றும் ஹாசனுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். மாணவிகள் ஒரு பஸ்சிலும், மாணவர்கள் ஒரு பஸ்சிலும் சென்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

இந்த சுற்றுலாவின் 2-வது நாள் சரவணபெலகோலாவில் இருந்து ஹனூர் நோக்கி பஸ் சென்று கொண்டிருந் தது. அப்போது, மாணவர்கள் சென்ற பஸ்சில் இருந்த பள்ளி முதல்வர் லோகேஷ், அங்கிருந்து மாணவிகள் சென்ற பஸ்சில் ஏறினார். அப்போது, லோகேஷ் சில மாணவிகளை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார். பின்னர் அவர் அந்த மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களுடைய பெற்றோர்கள், இதுகுறித்து மாவட்ட பழங்குடியின நலத்துறை அதிகாரி கிருஷ்ணப்பாவிடம் புகார் கொடுத்தனர்.

பள்ளி முதல்வர் கைது

இதுதொடர்பாக கிருஷ்ணப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திரகுமார் மீனாவிடம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தர்மேந்திரகுமார் மீனா உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையிலான போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், சுற்றுலா சென்றபோது சில மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் லோகேஷ், தூக்க மாத்திரைகள் கொடுத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திரகுமார் மீனா உத்தரவின்பேரில் ஹனூர் போலீசார் பள்ளி முதல்வர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திரகுமார் மீனா கூறுகையில், ‘லோகேஷ் இதற்கு முன்பு பிரியப்பட்டணா மற்றும் கார்வார் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வேலை பார்த்துள்ளார். அங்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் சிக்கியுள்ளார். இதனால் அவர் ஹனூரில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு மாற்றப்பட்டார். தற்போது லோகேஷ், சுற்றுலா சென்றபோது மாணவிகள் சிலருக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது லோகேஷ், கண்ணாடி பாட்டிலால் தன்னை தானே தாக்கிக் கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

Next Story