துபாயில் இருந்து மங்களூரு வந்த விமானங்களில் கடத்திய ரூ.15.81 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பயணிகள் கைது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த 2 விமானங்களில் கடத்திய ரூ.15.81 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு,
மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமானங்களில் வந்து இறங்கும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு 2 விமானங்கள் அடுத்தடுத்து வந்தது. அந்த விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
முதல் விமானத்தில் வந்த ஒரு பயணியின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள், அந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி, தன்னுடைய உடைமையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.11.93 லட்சம் மதிப்பிலான 359 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துகொண்டனர்.
இதேபோல, 2-வது வந்த விமானத்திலும் ஒரு பயணி தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர் தன்னுடைய பையில் வைத்திருந்த ரூ.3.88 லட்சம் மதிப்பிலான 116 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.15.81 லட்சம் மதிப்பிலான 475 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் பஜ்பே போலீசார் வழங்குப்பதிவு செய்து தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளையும் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story