வண்டறந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா 12 பேர் காயம்
வண்டறந்தாங்கல் கிராமத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் 12 பேர் காயம் அடைந்தனர்.
காட்பாடி,
காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு சாலையின் இருபுறமும் மூங்கில்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வேணுசேகரன் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 175–க்கும் மேற்பட்ட காளைகள் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளையை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் ஆரவாரம் செய்து கைகளால் மாட்டை தட்டி உற்சாகப்படுத்தினர். பெண்களும், குழந்தைகளும் வீட்டின் மாடிகளில் நின்று பார்த்து ரசித்தனர். காளைகள் இலக்கை அடையும் நேரம் அனைவரும் பார்க்கும் வகையில், சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் ஒளிபரப்பட்டது. விழாவில், கிராம நாட்டாமை கே.எஸ்.சேகர், ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ்குமார், தொழிலதிபர் ராகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் காளைகள் முட்டியதில் 12 பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழாவை காண வேலூர், ஆம்பூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், வாணியம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். இதையொட்டி காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க காட்பாடி தாசில்தார் சதீஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2–வது பரிசாக ரூ.55 ஆயிரம், 3–வது பரிசாக ரூ.40 ஆயிரம் உள்பட 34 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், காளைகள் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சில காளைகளின் வால் மற்றும் பின்பகுதியில் கிளிப்புகள் மாட்டப்பட்டிருந்தன. காளைகளின் முதுகின் மேலும், கொம்புகளிலும் பனை ஓலைகள், பாலித்தீன் கவர்கள், கிலுகிலுப்பைகள் கட்டப்பட்டிருந்தன. கிளிப்புகள் மாட்டி காளைகளை துன்புறுத்துவதை தடுக்க வேண்டும் என்று விலங்குகள்நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.