சேலம் கலெக்டர் அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


சேலம் கலெக்டர் அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Feb 2019 3:45 AM IST (Updated: 4 Feb 2019 11:35 PM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:– எங்கள் கிராமத்தில் உள்ள போயர் தெருவில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர் வந்தாலும் 3 குடங்களுக்கு மேல் கிடைப்பதில்லை. அன்றாட தேவைக்கு பயன்படுத்த கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீருக்காக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் குழந்தைகளை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும், குழந்தைகள் காலை பள்ளிக்கு அணிந்து செல்லும் உடைகளை வாரம் ஒருமுறைதான் துவைக்க வேண்டியுள்ளது. அழுக்கு துணியுடன் குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள் துர்நாற்றம் வீசுகிறது. ஏன் பள்ளிக்கு வந்தாய்? என கேட்கிறார்கள். இதன் காரணமாக நாங்கள் குழந்தைகளை சில நாட்கள் பள்ளிக்கு அனுப்புவதில்லை.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க மறுப்பதோடு, எங்கள் கிராமத்தினரை அவதூறாக பேசுகிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எங்களுக்கு குடிநீர் கிடைக்க இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைக்கேட்ட போலீசார் உங்கள் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உங்களில் 5 பேர் சென்று மனு கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் முற்றுகையை கைவிட்டனர். பின்னர் பொதுமக்கள் அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story