திருத்துறைப்பூண்டியில் ‘திடீர்’ மழை: கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்


திருத்துறைப்பூண்டியில் ‘திடீர்’ மழை: கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 4 Feb 2019 6:57 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் திடீரென பெய்த மழை காரணமாக கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசமாயின.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலர் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். புயலின் தாக்கம் காரணமாக திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பல சேதம் அடைந்தன.

தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் சேதம் அடைந்து கிடப்பது விவசாயிகளை சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் கஜா புயலால் கடுமையாக சேதம் அடைந்தது.

கொள்முதல் நிலையத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விட்டன. இதன் காரணமாக நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் திருத்துறைப்பூண்டி பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. இதில் கொள்முதல் நிலைய வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின.

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் வீசிய கஜா புயலுக்கு பின்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் மழை பெய்யாத நிலையில் நேற்று திடீரென மழை பெய்து, நெல் மூட்டைகளை நாசம் செய்திருப்பது விவசாயிகளை விரக்திக்கு உள்ளாக்கி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கஜா புயலின்போது சேதம் அடைந்த ஆதிரெங்கத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இங்கு நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று திடீரென பெய்த மழையால் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் நாசமாகி உள்ளன.

கொள்முதல் நிலையம் சேதம் அடைந்து இருந்தாலும் கொள்முதல் பணி நடக்கிறது. எனவே உடனடியாக கொள்முதல் நிலையத்தை சீரமைக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story