தை அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி


தை அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Feb 2019 4:15 AM IST (Updated: 5 Feb 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி பூம்புகார் சங்கமத்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவெண்காடு,

ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் சாமி தரிசனம் செய்தால், வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூம்புகார் சங்கமத்துறைக்கு வருகிறார்கள்.

நேற்று தை மாத அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பூம்புகார் சங்கமத்துறையில் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆறு, கடலோடு கலக்கும் பகுதியில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு உள்ள ரத்தினபுரனேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ரத்தினபுரனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பெண்கள் கோவிலில் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் உள்ள அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய 3 தீர்த்த குளங்களில் புனிதநீராடி, அங்குள்ள ருத்ரபாதத்தில் தர்ப்பணம் கொடுத்தனர். அஸ்திரதேவருக்கு 3 குளங்களிலும் தீர்த்தவாரி நடைபெற்றது.

Next Story