ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 5 Feb 2019 4:30 AM IST (Updated: 5 Feb 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது;-

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக போராட்டகாரர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் அன்னிய சக்திகளின் கைகூலியாக செயல்படுகிறார்கள். ஆலையால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆலை மூடப்பட்டதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வதந்தியால் பல ஆயிரம் பேர் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நம்பி தூத்துக்குடியில் பல சிறிய தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது ஆலை மூடப்பட்டதால் போதிய மூலப்பொருட்கள் கிடைக்காமல் மூடி கிடக்கின்றன. தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயர ஸ்டெர்லைட் தொழிற்சாலை நீதிமன்ற உத்தரவு படி உடனடியாக திறக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story