ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரை தேக்க முடியாத தாமரைக்குளம்


ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரை தேக்க முடியாத தாமரைக்குளம்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-05T01:20:02+05:30)

உத்தமபாளையத்தில் உள்ள தாமரைக்குளத்தில் ஆழ்துளை கிணறுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையம், 

உத்தமபாளையத்தில் கோகிலாபுரம் செல்லும் சாலையில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். முல்லைப்பெரியாற்றில் திறக்கப்படும் தண்ணீர் தனி கால்வாய் மூலம் இந்த குளத்துக்கு வருகிறது.

இதில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் உத்தமபாளையம், கோகிலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள 500 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதைத்தவிர நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியில் வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

குளத்தை சுற்றி, 25 மீட்டர் தூரத்தில் தனியார் சிலர் 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளனர். இதில் இருந்து தினமும் 20 மணி நேரம் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் குளத்தில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்த பகுதியில் 2-ம் போக நெல் விவசாயம் செய்யப்பட்டு பயிர்கள் நன்கு வளர்ந்து உள்ளது. தற்போது குளத்தில் தண்ணீர் குறைந்து விட்டது. நெல் பயிருக்கு இன்னும் குறைந்தது 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

எனவே குளத்துக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பது சிரமமாக உள்ளது. எனவே குளத்தை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, தாமரைக்குளம் மூலம் பல ஆண்டுகளாக இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. குளத்தை சுற்றி ஆழ்துளை கிணறு அமைத்து இரவு, பகலாக தண்ணீர் எடுக்கின்றனர். இவ்வாறு எடுக்கப்படும் தண்ணீர் உத்தமபாளையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் குழாய் மூலம் கொண்டு செல்கின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள சிறிய விவசாயிகளுக்கு வருடத்துக்கு குறிப்பிட்ட தொகை என்று பேசி ஒப்பந்தம் செய்து தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளம் மற்றும் ஆற்றங்கரையோரத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கு தனியார் நில உரிமையாளர்கள் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக்கூடாது என்று சட்ட விதிகள் உள்ளது. இதனை மீறிதான் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குளத்தை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். 

Next Story