சாலை பாதுகாப்பு வாரவிழா: இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஈரோடு,
சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று தொடங்கி ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு ஈரோடு போக்குவரத்து துணை ஆணையாளர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரகுபதி (ஈரோடு மேற்கு), கண்ணன் (ஈரோடு கிழக்கு), வெங்கட்ரமணி (பெருந்துறை), பழனிவேல் (கோபி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு பெருந்துறை ரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர் வழியாக சென்று வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் போக்குவரத்து போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள், புதிய வாகன வினியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றனர். மேலும், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களின் முன்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. வினியோகம் செய்தார்.
இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், கண்ணன், மாலதி, பிரதீபா, சதாசிவம், ராஜேந்திரன், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.