ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு சென்றபோது பரிதாபம்
உறவினர்களுடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றபோது வாலிபர் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு,
பெங்களூரு கோரமண்டல் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ராணுவ வீரர். இவருடைய மகன் ராஜ்தீப் (வயது 18). இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி செல்வதற்காக மைசூர்–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயில் ஈரோடு அருகே காவிரி ரெயில் நிலையம் அருகில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது ரெயிலின் படிக்கட்டில் நின்றிருந்த ராஜ்தீப் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள். அதன்பின்னர் உறவினர்கள் ரெயிலில் இருந்து இறங்கி ராஜ்தீப் தவறி விழுந்த இடத்தை நோக்கி வேகமாக சென்று பார்த்தனர்.
அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்தீப் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உறவினர்களுடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றபோது வாலிபர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இறந்த ராஜ்தீப் ராணுவ வீரருக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.