திருப்பூரில் மதுக்கடை முன்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து அண்ணனை கொன்றவரை தம்பிகள் பழிவாங்க முயற்சித்தது அம்பலம்
திருப்பூரில் மதுக்கடை முன்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. அண்ணனை கொன்றவரை தம்பிகள் பழிவாங்க முயற்சித்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரியை அடுத்த பேயன்விளைபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மகன் மதன் (வயது 26). இவர் நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பரான சசி என்பவருடன் 15 வேலம்பாளையம் 25 முக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மதன் அருகே சென்றனர். அதில் ஒருவர் திடீரென மதனை பின்பக்கமாக இறுக்கமாக பிடித்தார். மற்றொருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை மதனின் கழுத்தை நோக்கி வீசினார். இதனால் விலகிய அவரது நெற்றி பகுதியில் வெட்டு விழுந்தது.
பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்ட சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:–
மதனின் சொந்த ஊரான பேயன்விளைபுதூரை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மூத்த மகன் கணேஷ்க்கும், மதனுக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளது. இதனால் கடந்த 2015–ம் ஆண்டு மதன், கணேஷை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 2½ ஆண்டுகள் பாளையங்கோட்டை சிறையில் இருந்து விட்டு கடந்த ஆண்டு மே மாதம் ஜாமீனில் மதன் வெளியே வந்தார். அண்ணனை கொலை செய்த மதன் சிறையில் இருந்து வந்து விட்டாரே என்ற ஆத்திரத்தில் கணேஷின் தம்பிகளான சிவக்குமார், விக்னேஷ் ஆகியோர் மதனுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருப்பூருக்கு பிழைப்பு தேடி மதன் வந்து உள்ளார்.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் கணேஷின் தம்பி சிவக்குமார், விக்னேஷ் ஆகிய இருவரும் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதும் கடந்த 6 மாதங்களாக அவரை ரகசியமாக கண்காணித்தும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.