நலவாரியங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் 7-ந்தேதி தர்ணா


நலவாரியங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் 7-ந்தேதி தர்ணா
x
தினத்தந்தி 4 Feb 2019 10:45 PM GMT (Updated: 4 Feb 2019 9:23 PM GMT)

நலவாரியங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் 7-ந்தேதி தர்ணா கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு.

திருச்சி,

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரவி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் லட்சக்கணக்கான கட்டிட தொழிலாளர்களுக்கு வீடோ, வீட்டு மனையோ இல்லை. மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ள வீட்டு வசதி திட்டங்கள் எதுவும் கட்டிட தொழிலாளிக்கு கிடைப்பது இல்லை. எனவே வீடற்ற கட்டுமான தொழிலாளிக்கு வீடு கொடு என வலியுறுத்தி மார்ச் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்தை சீர் குலைத்து தட்டிப்பறிக்கும் திட்டமாகும்.

நாடு முழுவதும் உள்ள நல வாரியங்களை நாசமாக்கி தேசம் முழுவதற்கும் சமூக பாதுகாப்பு திட்டம் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் மத்திய அரசு புதிய சமூக பாதுகாப்பு திட்டம் என்று நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி டெல்லியில் தர்ணா நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

Next Story