6-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் : அன்னா ஹசாரே 4¼ கிலோ எடை இழந்தார்
அன்னா ஹசாரே நேற்று 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார். அவர் உடல் எடை 4¼ கிலோ குறைந்தது. ரத்த அழுத்தம் அதிகரித்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மும்பை,
மத்தியில் லோக்பால், மராட்டியத்தில் லோக் அயுக்தா சட்டத்தை அமல்படுத்த கோரியும், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை வழங்கக்கோரியும் கடந்த புதன்கிழமை முதல் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இவரின் போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 81 வயது அன்னா ஹசாரேவின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர் 6 நாட்களில் 4.25 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அன்னா ஹசாரேவை நேற்று நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.
பின்னர் ராஜ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாட்டை ஏமாற்றி வருகிறார். இந்த பயனற்ற மனிதர்களுக்காக அன்னா ஹசாரே தனது வாழ்க்கையை தியாகம் செய்வதை நான் விரும்பவில்லை. பிரதமரின் வாக்குறுதிகளை ஒருபோதும் அவர் நம்பவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன்.
எனவே உண்ணாவிரதத்தை விட்டுவிட்டு என்னுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து, மோடி அரசுக்கு மூடுவிழா நடத்த வருமாறு அன்னா ஹசாரேவிடம் கோரிக்கை வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பல்வேறு சமூக ஆர்வலர்களும் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை சந்தித்து சென்றவண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story