தென் தமிழகத்தில் முதன்முறையாக மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடக்கம்


தென் தமிழகத்தில் முதன்முறையாக மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடக்கம்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:00 AM IST (Updated: 5 Feb 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையில் உள்ள மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தென் தமிழ்நாட்டில் முதலாவதாக ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் குருசங்கர் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் குருசங்கர் கூறியதாவது:– சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமே இந்த நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி இருந்தது. உலகத்தரம் வாய்ந்த இந்த வசதி தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பெற்று பயனடைய இங்கு தொடங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் கீறலிடப்பட்டு செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைகளைக்கூட மிகச்சிறிய துளைகளின் மூலம் துல்லியமாகவும் எளிதாகவும் செய்யமுடியும். இவ்வாறு கூறினார்.

டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி கூறியதாவது:– ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பு மூலம் எவ்வித மனித தவறுகளுக்கும் இடம் கொடுக்காமல் மிக சிக்கலான அறுவை சிகிச்சை நடைமுறைகளைகூட எளிதாக செய்யலாம். துல்லியமான அறுவை சிகிச்சை, மிகச்சிறிய தழும்புகள், குறைவான அளவே ரத்த இழப்பு, குறைவாகவே ரத்தமேற்றுவதற்கான தேவை, குறைந்த வலி மற்றும் அதிர்ச்சி, குறுகிய காலமே மருத்துவமனையில் தங்க வேண்டியதேவை மற்றும் நோய் பாதிப்பில் இருந்து மீளுதல் என எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இரைப்பை குடலியல், கொழுப்பு நீக்கம், சிறுநீர்பாதையியல், மகளிர் நோயியல், புற்று நோய், இருதய அறுவை சிகிச்சை, தலை மற்றும் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை போன்ற சிறப்பு பிரிவுகளில் மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

மேலும் இந்த ரோபோவுக்கு சிறப்பான பெயரை தெரிவிப்பவர்களுக்கு பரிசையும் டாக்டர் குருசங்கர் அறிவித்துள்ளார். இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். வெற்றியாளர் மேலும் ஒரு நபருடன் 3 நாட்கள் தங்கும் வசதியுடன் மலேசியாவுக்கு விமானத்தில் சென்று வருவதற்கு விமான டிக்கெட்டுடன் கூடிய சுற்றுலா பயண வசதி செய்து தரப்படும். மேலும் ஆறுதல் பரிசாக 10 ஸ்மார்ட்போன்களும் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் 735888222 என்ற எண்ணுக்கு வாட்ஸ்–அப் மூலம் யோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story