அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் கலெக்டர் வழங்கினார்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன்களை கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 1,504 அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது. இதனை வழங்கி கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:– கிராமப்புறங்களில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் பிறப்பு எடை அதிகரிப்பிலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் அங்கன்வாடிப்பணியாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பிறப்பு முதல் 2 வயது வரை குழந்தைகள் எவ்வித குறைபாடுமின்றி வளருவதற்காக தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கண்காணித்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்து வருகிறது.
மேலும், அங்கன்வாடி மையங்கள் தாய் சேய் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாகும். இதில் பிறந்தது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை கண்காணிக்க ஸ்மார்ட் போன் மூலம் விரைவான இணையதள அமைப்பு வழங்கப்படுகிறது. இதில் கடுமையான ஊட்டச்சத்து குறைவு, குள்ளத்தன்மை, குழந்தைகளின் தொடர் கவனிப்பு மற்றும் கண்காணிப்பினை பதிவேடுகளின் மூலம் பராமரிக்கும் வேலைப்பளுவை குறைத்து, பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் செல்போன் செயலிகள் மூலம் உள்ளங்கை அளவில், பணியை குறைப்பதற்காக ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ள 1,504 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வழியாக ஸ்மார்ட் போன் வழங்கி பொதுவான பயன்பாட்டு மென்பொருள் மூலம் ஊட்டச்சத்து சீர்திருத்தங்கள் செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்திடவும், அங்கன்வாடி மையத்தின் சேவைகளை மேம்படுத்திடவும் உதவுகிறது. எனவே அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, திருவில்லிப்புத்தூர் வட்டாரம் கொளுர்பட்டியைச் சேர்ந்த நாகவல்லி என்பவர் பணியின் போது இறந்தார். அவரின் வாரிசுதாரர் ராஜலெட்சுமி என்பவருக்கும், விருதுநகர் வட்டாரத்தை வைரமணி என்பவர் பணியின் போது இறந்தார். அவரின் வாரிசான மாரீஸ்வரி என்பவருக்கும் கருணை அடிப்படையில் அங்கன்வாடிப் பணியாளர் நியமன உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பத்மாசனி, வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.