அன்பாக சொன்னால் ஹெல்மெட் அணிவதை மக்கள் ஏற்பார்கள் நாராயணசாமி பேச்சு


அன்பாக சொன்னால்  ஹெல்மெட் அணிவதை மக்கள் ஏற்பார்கள் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2019 5:00 AM IST (Updated: 5 Feb 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

அன்பாக சொன்னால் ஹெல்மெட் அணிவதை மக்கள் ஏற்பார்கள் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் சாலை பாதுகாப்பு வாரவிழா சாரத்தில் உள்ள உழவர்கரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஹெல்மெட்டுகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். மேலும் இ–செலான் வழங்கும் எந்திரத்தையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களையும் அவர் வினியோகித்தார்.

அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுச்சேரிக்கு கடந்த 2 ஆண்டுகளாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் புதுச்சேரி வருகின்றன. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணம்.

நமது மாநிலத்தின் மக்கள்தொகை 12 லட்சம்தான். ஆனால் வாகனங்களின் எண்ணிக்கை 10 லட்சம். வாகன பெருக்கத்திற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த பிரச்சினை நமது மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் இதற்கு தீர்வு காண முடியும்.

2 சக்கர வாகன பயன்பாடு, விபத்துகளை குறைக்கவேண்டும். இதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அபராதம் விதிப்பது மட்டும் போலீசாரின் வேலை அல்ல. விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும். சட்டத்தை வைத்துக் கொண்டு மட்டும் எதையும் செய்து விட முடியாது.

நமது போலீசார் வடக்கு, தெற்கு என்று கூறி அபராதம் வசூல் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறார்கள். முதலில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது தாய்மார்கள் ஹெல்மெட் அணிந்தால் தலையில் உள்ள பூ கசங்கி விடுகிறது என்கிறார்கள்.

எதையும் அதிகாரத்தோடு செய்ய நினைத்தால் கொஞ்சநாட்கள்தான் இருக்கும். எனவே ஹெல்மெட் தொடர்பாக மக்களிடம் படிப்படியாக விழிப்புணர்வு ஏற்பத்தி கட்டாயமாக்கலாம். நமது மாநில மக்களில் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் வைத்துள்ளார்கள். முதலில் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிக்கு கொண்டுவாருங்கள். அதற்கு 2 மாதமாவது காலக்கெடு கொடுங்கள்.

இதுபோன்ற விழிப்புணர்வுக்கு தொழிலாளர் துறையையும் சேர்த்துக்கொள்ளலாம். நமது மாநில மக்கள் அன்பால் சொன்னால் ஏற்பார்கள். அதிகாரமாக சொன்னால் எதையும் ஏற்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:–

சாலை பாதுகாப்பிற்காக போக்குவரத்துத்துறைக்கு ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளோம். கவனக்குறைவாக விபத்தில் சிக்கி உயிருக்கு போராட வேண்டுமா? உயிர் போய்விட்டால் பரவாயில்லை. கை, கால்கள் ஊனமானால் எவ்வளவு துயரம்? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது மாநிலத்தில் மட்டும் 10 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு வாகனம் உள்ளது. வருடத்துக்கு 4 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. 500–க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்களும் பதிவாகின்றன.

வாகன பெருக்கத்திற்கு ஏற்ப நிலப்பரப்பினை அதிகரிக்க முடியாது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை போலீசார் பிடித்தால் உடனடியாக சிபாரிசு கேட்டு போன் வருகிறது. நாங்களும் சிபாரிசு செய்கிறோம். ஹெல்மெட் அணியவேண்டும் என்று சொன்னால் எதிர்ப்பு வருகிறது. இதை சிலர் அரசியலாக்குகிறார்கள்.

சென்னையில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட்டுக்குள்ளேயே செல்போனை வைத்து பேசிக்கொண்டே செல்கிறார்கள். சிலர் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கிறார்கள். கடந்த ஆண்டு 219 பேர் விபத்தில் இறந்துள்ளனர். இதில் 116 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர். 64 சதவீத விபத்துகள் 2 சக்கர வாகனங்களால் நடந்துள்ளது.

இதுபோன்ற சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். பஸ்கள், ரெயில்களை போக்குவரத்துக்கு மக்கள் பயன்படுத்த வேண்டும். எனவே அதிக பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பெண்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு அளிக்கவேண்டும். விழிப்புணர்வு குழுக்களில் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களை சேர்க்கவேண்டும். அது மக்கள் இயக்கமாக மாறவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story