சாத்தனூர் அணையில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால் தொழிலாளர்கள் பாதிப்பு


சாத்தனூர் அணையில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையால் தொழிலாளர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 8:47 PM GMT (Updated: 5 Feb 2019 11:58 PM GMT)

சாத்தனூர் அணையில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டராம்பட்டு,

சாத்தனூர் அணை மூலம் நீர்ப்பாசனம் பெறப்படுவதோடு மீன்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. கட்லா, ரோகு, வாழை போன்ற வகையான மீன்கள் அணையில் வளர்க்கப்படுகிறது. இந்த மீன்கள் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மூலம் பிடிக்கப்படுகிறது.

இவை சென்னை, கடலூர், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக சாத்தனூர் அணையிலிருந்து ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளில் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.1½ கோடிக்கு தனிநபர் ஒருவர் மீன்பிடி ஏலம் எடுத்திருந்தார்.

அதன் மூலம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான புதூர் செக்கடி, மலையனூர் செக்கடி உள்ளிட்ட பகுதிகளில் 42 குழுக்களாக பிரிக்கப்பட்டு 82 மீனவ தொழிலாளர்கள் மீன்களை பிடித்து வந்தனர்.

மேலும் மீன் வளர்ச்சி கழகத்தின் மூலமும் தினக்கூலி தொழிலாளர்கள் மீன்பிடி பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேநேரத்தில் மீன் பிடிக்கும் இடங்களில் உள்ள வலைகளை சில மர்மநபர்கள் அறுத்து குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனை தடுப்பதற்காகவும், திருட்டு மீன்பிடிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகவும் கண்காணிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கண்காணிப்பு பணியாளர்கள் தினமும் படகில் சென்று திருட்டு மீன்பிடிப்பதை தடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சாத்தனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25), செந்தில் (35), சிலம்பரசன் (27), மூர்த்தி (45) உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவர்களை மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களது தாக்குதலுக்கு பயந்து அணையில் குதித்த செந்தில் உள்பட 2 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் சாத்தனூர் அணை பகுதியில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக அணையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மீன் வளர்ச்சிக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கும்பல் தாக்குதலுக்கு பயந்து அணையில் குதித்தபோது 2 பேர் இறந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு முறையாக மீன்கள் பிடிக்கப்படும் வரை மீன் பிடிக்கும் தொழிலை நிறுத்தி வைக்குமாறு கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்” என்றார்.


Next Story