புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மணமேல்குடி,

மணமேல்குடி போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், கடை வீதி வழியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், மலையப்பன், காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கந்தர்வகோட்டையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காரைக்குடி திட்ட செயலாக்க பிரிவு சார்பில், தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் கந்தர்வகோட்டை நகரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

அன்னவாசல் காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் வழியாக மீண்டும் அரசு பள்ளியை வந்தடைந்தது.

இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடை பிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழி முறைகளான, இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும். வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்ய வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து, போலீசார் பாலசுப்ரமணியன், விக்கி, பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

கறம்பக்குடியில் வட்டார போக்குவரத்து போலீசார், வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து செல்வது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஆலங்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு அய்யனார் ஊர்வலத்தை தொடங்கி வைத்து, விதிமுறைகள், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடை முறைகள், விபத்து தவிப்பு போன்றவை குறித்து பேசினார்.

கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் போக்குவரத்து விதிமுறைஅடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, சுப்பிரமணியன் மற்றும் போலீசார், வியாபாரிகள், வர்த்தகம், ரோட்டரி சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story