ஈரோடு நுழைவு பாலத்தில் தடுப்பு கம்பி உடைந்து லாரி மீது விழுந்தது போக்குவரத்து பாதிப்பு


ஈரோடு நுழைவு பாலத்தில் தடுப்பு கம்பி உடைந்து லாரி மீது விழுந்தது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு நுழைவு பாலத்தில் தடுப்பு கம்பி உடைந்து லாரி மீது விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கே.கே.நகர் சென்னிமலை ரோட்டில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த பாலம் குறுகலாக இருப்பதால் அதன் வழியாக ஒரு பஸ் சென்றால் எதிரே வரும் வாகனங்கள் காத்திருந்து, பஸ் சென்ற பிறகே செல்ல முடியும். மேலும், நுழைவு பாலத்தில் உயரம் குறைவாக உள்ளது. இதனால் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் உயரமான வாகனங்கள் நுழைவு பாலத்தில் செல்ல முடியாது.

கனரக வாகனங்கள் நுழைவு பாலத்தில் மோதாமல் இருக்க பாலத்தின் இருபுறமும் சற்று தொலைவில் தடுப்பு கம்பிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் ரங்கம்பாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த லாரி நுழைவு பாலத்தில் நுழைந்து வெளியே வந்தது. அப்போது வெளிவரும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பியில் லாரியின் கூரை மோதியது. இதில் தடுப்பு கம்பி உடைந்து டிரைவருக்கு மேல் பகுதியில் லாரியின் மீது விழுந்தது. சத்தம் கேட்டதும் லாரியின் டிரைவர் உடனடியாக படுத்து கொண்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று லாரியின் டிரைவரை மீட்டனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘கடந்த வாரம் லாரி ஒன்று தடுப்பு கம்பியின் மீது மோதியது. அப்போது தடுப்பு கம்பி கீழே விழுந்தது. அதன்பின்னர் ரெயில்வே அதிகாரிகள் அந்த கம்பியை முறையாக வெல்டிங் வைத்து பொருத்தாமல், சாதாரணமாக வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

மேலும், இரும்பு கம்பி அதிக பாரமாக உள்ளது. அதற்கேற்ப பாதுகாப்புடன் பொருத்தப்படவில்லை. இதனால் தற்போது லாரி மோதியதும் தடுப்பு கம்பி உடைந்து விழுந்துவிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பி இருக்கிறார். எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு உரிய பாதுகாப்புடன் தடுப்பு கம்பிகளை பொருத்த ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்றனர்.


Next Story