பவானிசாகரில் வாய்க்காலில் மூழ்கிய இலங்கை அகதியை தேடும் பணி தீவிரம்
பவானிசாகரில் வாய்க்காலில் மூழ்கிய இலங்கை அகதியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பவானிசாகர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர்,
பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜெகன் (வயது 35). டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர்– மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்று குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பவானிசாகர் போலீசார் அங்கு சென்று ஜெகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று 2–வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஜெகனை தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கதி என்ன? என்று தெரியவில்லை. இன்று (புதன்கிழமை) அவரை தேடும் பணி 3–வது நாளாக நடக்கிறது.
இதற்கிடையே இதுபற்றி இலங்கை வவுனியாவில் உள்ள ஜெகனின் பெற்றோர் கனகேந்திரன், பெருமாயிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு விசா கிடைக்காததால் பவானிசாகருக்கு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஜெகனுக்கு சங்கீதா (33) என்ற மனைவியும், சுஜி (7) என்ற மகளும், சந்தோஷ் (9) என்ற மகனும் உள்ளனர்.