தாளவாடி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா? நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து
தாளவாடி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹடா, தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், தலமலை, ஆசனூர் ஆகிய வனப்பகுதிகள் தமிழக– கர்நாடக எல்லையில் அமைந்து உள்ளன.
இந்த நிலையில் தமிழக எல்லைக்கு உள்பட்ட மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு புதிய நபர்கள் வந்து செல்வதாகவும், அவர்கள் அரசுக்கு எதிராக பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தெங்குமரஹடா, தலமலை நெய்தாளபுரம், பெஜலட்டி, தடசலட்டி, தாளவாடி ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது மலைப்பகுதிகளில் கால்நடை மேய்ப்பவர்களிடம் புதிய நபர்கள் வருகை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு தகவல் திரட்டப்பட்டன. அதுமட்டுமின்றி மலைப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் முகாம் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் போலீசாரால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்கள் திம்பம், தலமலை, தாளவாடி மற்றும் காராச்சிகொரை சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளன. மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பது குறித்து தெரியவந்தால் அதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி மலைவாழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி மலைக்கிராமங்களில் மாறுவேடங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? எனவும், புதிய அமைப்புகள் எதுவும் உருவாக்கப்பட்டு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.