கடமலைக்குண்டு அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் சாவு


கடமலைக்குண்டு அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 6 Feb 2019 3:45 AM IST (Updated: 6 Feb 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் உயிரிழந்தது.

கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு அருகே பாலூத்து மற்றும் அய்யனார்கோவில் வனப்பகுதிகளில் புள்ளிமான்கள், கடமான்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் மற்றும் இரையை தேடி மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு மான்கள் வருகின்றன. இவ்வாறு வருகிற மான்கள், தேனி பிரதான சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதியும், தோட்டங்களில் உள்ள கிணறுகளில் விழுந்தும் இறப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யனார்கோவில் அருகே, இரவுநேரத்தில் சாலையை கடந்த கடமான் வாகனம் மோதி பலியானது.

இதேபோல பாலூத்து வனப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி, தேவராஜ் நகர் கிராமத்துக்கு ஒரு புள்ளி மான் வந்தது. அப்போது அங்குள்ள தோட்டத்து கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் கிணற்றுக்குள் விழுந்த மான், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிணற்றுக்குள் கிடந்த மானின் உடலை மீட்டனர். இந்த மான் 2 வயது உடையதாகும். மேலும் சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. கடந்த 10 தினங்களில் கடமலைக்குண்டு பகுதியில் 2 மான்கள் இறந்துள்ளன. மேலும் மான்கள் இறக்க வாய்ப்பு உள்ளது. எனவே வனப்பகுதியில் தொட்டிகளை கட்டி, அங்கு தண்ணீரை நிரப்பி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story