‘வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ்மொழி மட்டும் தான்’ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
திருப்பூர் புத்தக கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ்மொழி மட்டும் தான் என்று கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்–பாரதி புத்தகாலயம் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள பத்மினி கார்டனில் 16–வது புத்தக திருவிழா கடந்த 31–ந்தேதி தொடங்கியது. 150 அரங்குகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புத்தக கண்காட்சி தொடங்கிய நாளில் இருந்தே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் 6–ம் நாளான நேற்று புத்தக கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சி வளாகத்தில் ‘தினத்தந்தி’ நாளிதழ் சார்பில் வைக்கப்பட்டிருந்த ‘தினத்தந்தி’ பதிப்பக புத்தகங்களை பார்வையிட்டு வாங்கி சென்றனர்.
கண்காட்சி வளாகத்தில் தினந்தோறும் மாலை 6 மணி முதல் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், புகைப்பட கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா மற்றும் இலக்கிய விருதுகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முருகநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி கணேசன் முன்னிலை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் லோகநாதன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:–
தமிழ் மொழி உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழியாகும். எழுத்துக்கும், சொல்லுக்குமான இலக்கணத்தை மற்ற மொழிகள் பேசிய போது, வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ் மொழி மட்டும் தான். தமிழில் உள்ள எல்லா எழுத்துகளும் ஆயுதத்தை போன்ற எழுத்துகள் தான் என்பதை, வெள்ளையரை எதிர்த்து பாரதி எழுதிய எழுத்துகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கடைக்கோடி தமிழனுக்கும், தமிழின் பெருமை சென்று சேர வேண்டும். தமிழ் செம்மொழி சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துள்ளது. திருவாசகத்தை நமது மொழியினர் கற்கும் முன்பே ஜி.யு.போப் அதை கற்று தேர்ந்தார். இதனாலேயே அவர் கடிதம் எழுதும் போது கூட இந்த திருவாசகத்தை மேற்கோள் காட்டித்தான் கடிதத்தையே எழுதி வந்தார். அத்தகைய பெருமை உடையது நமது தமிழ் மொழி.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேசும் போது, உலகில் உள்ள மிகவும் பழமையான மொழிகள் தமிழும், சீன மொழியும் தான். உலகின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குறளை மொழி பெயர்த்ததாலேயே காந்தியடிகளால் திருக்குறளை படிக்க முடிந்தது. மறுபிறவி இருந்தால் திருக்குறளுக்காக தமிழை தொடர்ந்து படிப்பேன் என்று கூறினார் காந்தியடிகள்.
தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கே தமிழ் மொழியில் பெயர்களை வைக்கும் வழக்கம் முற்றிலும் குறைந்து விட்டது. தமிழில் ஆயிரக்கணக்கான அழகான பெயர்கள் உள்ளன. அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள். நாம் முதலில் தமிழை போற்ற வேண்டும் என்றார்.