தெலுங்கானா ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் பார்வையிட்டனர்


தெலுங்கானா ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 6 Feb 2019 4:30 AM IST (Updated: 6 Feb 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி காந்திநகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை தெலுங்கானா ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் குழுவினர் பார்வையிட்டனர்.

காட்பாடி,

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி காந்திநகரில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் சாலைகள் போடவும், சிமெண்டு தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த உரங்கள் மாநகராட்சி சார்பில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையத்தை பார்வையிட தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் 42 பேர் நேற்று வந்தனர். என்ஜினீயர்கள் குழுவினர், மையம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை முதலில் பார்வையிட்டனர். அவர்களுக்கு, மண்டல உதவிகமிஷனர் மதிவாணன், வீடுகள், கடைகளில் இருந்து குப்பைகள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும், அவை மையத்தில் வைத்து எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது என்றும் விளக்கி கூறினார்.

மேலும் உதவிகமிஷனர் மதிவாணன், குப்பைகளில் இருந்து உரங்கள் தயாரிக்கப்படும் முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். அப்போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் யுவராஜ் மற்றும் சுகாதார ஊழியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் உடனிருந்தனர்.


Next Story