நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: ‘‘மத்திய–மாநில அரசுகளை விரட்ட மக்களுக்கு நல்ல வாய்ப்பு’’ கீழடி ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘‘நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வந்தால், அது மத்திய–மாநில அரசுகளை விரட்ட மக்களுக்கு நல்ல வாய்ப்பு’’ என்று கீழடியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கீழடி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஊரின் முகப்பு பகுதியில் அமைத்திருந்த 40 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.
பின்னர் ஊராட்சி சபை கூட்டம் நடந்த இடத்திற்கு அவர் வந்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–
கீழடி வரலாறு உலகமே பேசும் வகையில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது, மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? என்பதற்கு 2 ஆதாரங்களை முன்வைக்கலாம். அதில் ஒன்று ஆதிச்சநல்லூர்; மற்றொன்று கீழடி.
இங்கு 2014–ம் ஆண்டு முதல் மத்திய அரசு மூலம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அமர்நாத் ராமகிருஷ்ணன் சிறப்பாக அகழ்வாராய்ச்சி செய்து பண்டைய தமிழர் நாகரிகங்களை வெளிக்கொணர்ந்தார்.
அதற்குள் மோடி அரசு, அவரை மாற்றிவிட்டு, வேறு அதிகாரியை நியமித்து, அகழாய்வு பணி மேற்கொள்ள அனுமதித்தது. அதற்கு காரணம், தமிழர்களின் வரலாற்று பெருமைகளை ஏற்றுக்கொள்ள முடியாமலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும், திட்டமிட்டு அந்த அதிகாரியை மாற்றிவிட்டனர்.
தமிழகத்தில் தற்போது 18 சட்டமன்ற தொகுதிகள் அநாதைகளாக உள்ளன. அதில் கீழடி கிராமம் அமைந்துள்ள மானாமதுரை தொகுதியும் ஒன்று. இதுதவிர கலைஞர் கருணாநிதி இறப்பு, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் இறப்பு, அமைச்சருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் காலியான ஓசூர் தொகுதி என மேலும் 3 தொகுதிகளும் காலியாக உள்ளன. மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத நிலை நிலவுகிறது.
நான் மேற்கு வங்காளம் சென்றபோது, ஊராட்சி சபை கூட்டம் குறித்து அங்கிருந்த முக்கிய தலைவர்கள் கேள்விப்பட்டு, வியப்பாக இருக்கிறது என்று கூறியதுடன், அது எவ்வாறு நடக்கிறது? என்று கேட்டனர். தி.மு.க.வால் மட்டுமே ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தமுடியும். வேறு யாராலும் நடத்த முடியாது. ஏனென்றால் தலைவர் கருணாநிதி, எங்களை கட்டுப்பாட்டோடு நடத்தினார். அதனால்தான் நாங்கள் ஊராட்சி சபை கூட்டத்தை சிறப்பாக நடத்துகிறோம்.
கடந்த 27–ந் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மோடி வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை அறிவித்து, அடிக்கல் நாட்டு விழா நடத்தவே மோடிக்கு 4½ ஆண்டுகள் ஆகிவிட்டது. டெல்லியில் இருந்து நடந்து வந்திருந்தாலே எப்போதோ அடிக்கல் நாட்டு விழா முடிந்து, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கியிருக்கும். மேலும் இடைக்கால பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவில்லை.
நாட்டில் உள்ள முக்கியமான 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் 11 நகரங்களில் அமைக்கப்படும் என்றார்கள். ஆனால் ஒரு நகரத்தில் கூட ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படவில்லை. பிரதமர் மோடி, ஒவ்வொரு ஊருக்கு ஏற்றமாதிரி கோட், தொப்பி அணிந்து கொள்கிறார். மக்களை ஏமாற்ற அவர் இவ்வாறு செய்கிறார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், மக்களை சந்திக்கவும் மோடி வரவில்லை. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு, சீதோஷ்ண நிலை சரியில்லை என்று பாதியிலேயே சென்றுவிட்டார். ஒரு காலத்தில் வானத்தில் பறந்த ஹெலிகாப்டரை பார்த்த உடனே தரையில் நின்று கும்பிடு போட்டவர், இதே எடப்பாடி பழனிசாமிதான்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஈவு, இரக்கம் இன்றி காக்கை, குருவிகளை போன்று மக்களை சுட்டு கொன்றனர். எனவே அ.தி.மு.க. அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். நான் மற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் குறைந்த நேரமே பேசினேன். ஆனால் கீழடியில் தான் கூடுதல் நேரம் பேசியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பெண்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் உள்பட 28 பேர் அவரிடம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:–
தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். கீழடியில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த தகவல்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கீழடியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். படித்த பெண்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.
பள்ளி, அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். தேவேந்திரர் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். 4 வழிச்சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
நீங்கள் அளித்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளை சந்தித்து நிறைவேற்ற வலியுறுத்தப்படும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் மக்கள் விடுத்த கோரிக்கைகள் 50 சதவீதம் நிறைவேறிவிடும். வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரலாம். இதை மக்கள் நல்லதொரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, நல்ல தீர்ப்பு வழங்கி மத்திய–மாநில அரசுகளை விரட்ட வேண்டும்.
தி.மு.க. ஆதரவுடன் மத்திய அரசு அமைந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அளித்த சிகிச்சை பற்றிய உண்மை நிலை தெரிவிக்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் சென்று, கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்.