கொட்டாம்பட்டி அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்தது; பெண் பலி
கொட்டாம்பட்டி அருகே டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி,
நெல்லை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் அருள்தாஸ்(வயது 58). இவர் மும்பையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தற்போது சென்னை துரைப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர் சொந்த ஊரான அல்லிகுளத்துக்கு காரில் வந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். காரில் மைக்கேல் அருள்தாஸ், அவருடைய மனைவி ஜாஸ்மின் அமிர்தகனி(54) ஆகியோர் இருந்தனர். உறவினர் சார்லஸ்(58) காரை ஓட்டினார்.
இந்த கார் கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி விலக்கு நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்ததில் நிலைகுலைந்த கார், சிறிதுதூரம் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜாஸ்மின் அமிர்தகனி பரிதாபமாக இறந்தார்.
மைக்கேல் அருள்தாஸ், சார்லஸ் ஆகிய 2 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.