ராமநகர் அருகே தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது


ராமநகர் அருகே தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது
x
தினத்தந்தி 6 Feb 2019 4:25 AM IST (Updated: 6 Feb 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 2 விமானிகள் உயிர் தப்பினர்.

பெங்களூரு, 

பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு தேவையான போர் விமானங்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. எச்.ஏ.எல். விமான நிலையத்தில் பயிற்சி விமானங்கள் மூலம் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘மிரஜ் -2000’ என்ற வகையை சேர்ந்த போர் விமானம் புதிய வசதி களுடன் மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய விமானம் விமான நிலைய வளாகத்திலேயே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில், விமானிகளான டேராடூனை சேர்ந்த சித்தார்த் நேகி (வயது 31), உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சமீர் அப்ரோல் (33) ஆகியோர் உடல் கருகி இறந்தனர். இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமநகர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு;-

இந்திய ராணுவத்துக்கு தேவையான இலகுரக ஹெலிகாப்டர் ‘ருத்ராவை’ பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை சுமந்து செல்லவும், எதிரிகள் மீது தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலையில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து இலகுரக ‘ருத்ரா’ எம்.கே.-4 என்ற ஹெலிகாப்டர் வானில் பறந்தது. ஹெலிகாப்டரை 2 விமானிகள் இயக்கினர்.

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா ககலிபுரா அருகே உள்ள தடகுப்பே கிராமத்தின் மேல்புறம் பறந்தபோது திடீரென்று ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டதோடு, ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினர். அதாவது அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, 2 விமானிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

பின்னர் சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கும், எச்.ஏ.எல். நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்னொரு ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவில் இருந்து தடகுப்பே கிராமத்திற்கு சென்று இறங்கி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட ஹெலிகாப்டரை ஆய்வு செய்து கோளாறை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின் அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதை அறிந்த அந்த கிராம மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உருவானது.

Next Story