கவர்னர் வஜூபாய்வாலா உரையுடன் கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்குகிறது
கவர்னர் வஜூபாய்வாலா உரையுடன் கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி செயலாற்றி வருகிறார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரசை சோ்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., குமாரசாமியின் செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த குமாரசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு பேசுவதை அனுமதித்தால், பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.
உடனே சித்தராமையாவை அழைத்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணி அரசு பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு கூட்டணியில் நிலைமை சீரடைந்தது.
இருப்பினும் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கும் விதமாக மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க காங்கிரசில் அதிருப்தியில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா ஆகிய 4 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டார் என்றும், எடியூரப்பா தான் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் பா.ஜனதாவை சேர்ந்த உமேஷ்கட்டி எம்.எல்.ஏ. பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதாவது கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்பதை அவர் சூசகமாக தெரிவித்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது.
இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுவார் எனவும், நாளை மறுநாள்(8-ந் தேதி) கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து வாக்காளர்களை கவரும் விதமாக சில கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடரையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுப்பார்கள் அல்லது கவர்னரை நேரில் சந்தித்து அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிப்பார்கள் என்று தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கான முயற்சியில் பா.ஜனதா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்-மந்திரிக்கு கவர்னர் உத்தரவிடுவார். அந்த நிலை ஏற்பட்டால் குமாரசாமி திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.
இதற்கிடையே மத்திய மந்திரி சதானந்தகவுடா உள்பட சில தலைவர்கள் டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களிடம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.
அதே நேரத்தில் பா.ஜனதாவின் அமைப்பு செயலாளர் ராம்லால், கர்நாடகம் வந்துள்ளார். ஆபரேஷன் தாமரையை செயல்படுத்துவது குறித்து எடியூரப்பாவை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முதல்-மந்திரி குமாரசாமி முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீராமுலு பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த கூளிகட்டி சேகர் எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கூளிகட்டி சேகர் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தவறு. காங்கிரசில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு அழைத்து வர முடியும். அவ்வாறு இருக்கும்போது, நான் எதற்காக காங்கிரசில் சேர வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் இன்று கர்நாடக அரசியலில் பல்வேறு பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story