விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.2,098 கோடி மட்டுமே கிடைக்கும் - குமாரசாமி பேச்சு


விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.2,098 கோடி மட்டுமே கிடைக்கும் - குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:32 AM IST (Updated: 6 Feb 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கர்நாடகத்திற்கு ரூ.2,098 கோடி மட்டுமே கிடைக்கும் என முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

மின்சாரத்துறை சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் விழிப்புணர்வு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் சுமார் 60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இதனால் கர்நாடகத்திற்கு ரூ.2,098 கோடி மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்திற்கு கர்நாடக அரசு ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வழங்குகிறது. இலவச மின்சார திட்டத்தால் மின் விநியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்திற்கு(பெஸ்காம்) ரூ.4,000 கோடி கடன் சுமை உள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

மின்சாரத்துறையின் அடிப்படை நிறுவன மான மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதிச்சுமை உள்ளது. இதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இதற்கான மானிய தொகை ரூ.4,000 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு வந்து நின்றுள்ளது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story