எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: பெங்களூருவில் நடந்தது


எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 6 Feb 2019 4:36 AM IST (Updated: 6 Feb 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

கா்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் வஜூபாய் வாலா இன்று சபையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா உள்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சட்ட சபையில் எந்தெந்த பிரச்சினைகளை கிளப்புவது, கூட்டணி அரசுக்கு எவ்வாறு நெருக்கடி கொடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக கர்நாடகத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து பா.ஜனதா பிரச்சினை கிளப்ப உள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். இந்த கூட்டத்தில் எங்கள் கட்சியின் அமைப்பு செயலாளர் ராம்லால் கலந்து கொண்டார்.

மாநிலத்தில் அரசே இல்லை என்ற நிலை உள்ளது. வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன. வறட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை. அவர்களுக்குள் மோதல் நீடித்து வருகிறது.

நாளை (இன்று) கவர்னர் உரை முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

இந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் திட்டம் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story