அரசியல் கட்சிகள் சார்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


அரசியல் கட்சிகள் சார்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2019 5:10 AM IST (Updated: 6 Feb 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து அரசியல் கட்சிகள் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை வாபஸ்பெற வேண்டும், தமிழகத்தைப்போல் புதுச்சேரி மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மீனவர், சிறுபான்மை சமூகத்தினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.

தி.மு.க.வின் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல். ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மாநில அமைப்பாளர் அமுதவன், கம்யூனிஸ்டு எம்.எல். செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பஷீர் அகமது, புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த இட ஒதுக்கீட்டினால் சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேசினார்கள்.

Next Story