கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே காட்டில் கிடந்த பிணம் பற்றி போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேரி பிரிவை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் குமரேசன் (வயது 25). பி.காம். பட்டதாரியான இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் குமரேசன் அங்குள்ள காட்டு பகுதியில் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணத்தின் அருகே ஆடைகள் எரிந்த நிலையில் கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார் பிணத்தை மீட்டனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குமரேசனை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து இருக்கலாம், என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் குமரேசன் தீக்குளித்து தற்கொலை செய்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் கூறியதாவது :-
குமரேசனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணமாகி உள்ளது. பின்னர் அப்பெண் இவருடன் குடும்பம் நடத்தாமல் பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் குமரேசனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக தனியாக வசித்து வந்து உள்ளனர். ஆனால் அப்பெண்ணும் பிரிந்து சென்று விட்டதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து உள்ளார்.
இதற்கான பெட்ரோலை அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் குமரேசனே பாட்டிலில் வாங்கி சென்று இருப்பது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் கடந்த மாதம் 30-ந் தேதி குமரேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story