2 பாலியல் பலாத்கார வழக்குகளில் 4 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
2 பாலியல் பலாத்கார வழக்குகளில் 4 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 14.1.2015 அன்று அவர் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பில்லப்பா என்பவரின் மகன்கள் முனிராஜ் (21), ராமமூர்த்தி (22) ஆகியோர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி முனிராஜ், ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் பாலியல் பலாத்கார குற்றத்திற்காக முனிராஜ், ராமமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை தாலுகா பாலதொட்டனப்பள்ளியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 18.10.2015 அன்று அவர் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த நேரம் அப்பகுதியைச் சேர்ந்த வீரேந்திரன் (27), அவரது நண்பர் சந்தோஷ் (22) ஆகிய 2 பேரும் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வீரேந்திரன், அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றம் சாட்டப்பட்ட வீரேந்திரன், சந்தோஷ் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தண்டனை பெற்ற முனிராஜ், ராமமூர்த்தி, வீரேந்திரன், சந்தோஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அழைத்து சென்று அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த 2 வழக்குகளிலும் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story