நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாராயணசாமி– நமச்சிவாயம் தலைமையில் குழுக்கள் அமைப்பு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாராயணசாமி– நமச்சிவாயம் தலைமையில் குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 6 Feb 2019 5:47 AM IST (Updated: 6 Feb 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதுவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் இன்னும் தேர்தல் பணிகளை தொடங்கவில்லை. கூட்டணி தொடர்பாக முடிவான பின்னரே அந்த கட்சி செயல்பாடுகளை தொடங்கும் என்று தெரிகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சி பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து தொகுதிதோறும் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறது. மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் அவ்வப்போது புதுவை வந்து காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் புதுவையில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் குழு, பிரசார குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு குழு தலைவராக முதல்–அமைச்சர் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் குழு தலைவராக அமைச்சரும், புதுவை காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயமும், பிரசார குழு தலைவராக அமைச்சர் கந்தசாமியும், ஒருங்கிணைப்பாளராக அரசு கொறடா அனந்தராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story