விரைவில் வருகிறது ஹோண்டா சி.பி. 300 ஆர்
பெரும்பாலான நிறுவனங்கள் சாகச பிரியர்களுக்கான மோட்டார் சைக்கிளை தயாரித்து வெளியிடுகின்றன. வழக்கமான சாலைப் பயணம் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களில் சாகச பயணம் மேற்கொள்வதற்கு வசதியான ‘ஆப் ரோட்’ வாகனங்களும் வந்தவண்ணம் உள்ளன.
பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்கள் இப்போது இதுபோன்ற சாகச மோட்டார் சைக்கிளை உதிரி பாகங்களாக இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து விற்பனை செய்கின்றன.
அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் தனது சி.பி. 300 ஆர் மாடலை பிப்ரவரி 8-ந் தேதி அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதுவும் உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் ‘ஸ்போர்ட்ஸ் கபே’ மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கு எல்.இ.டி.யால் ஆனது. முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொண்டது. இதில் டியூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளது. இதில் உள்ள ஐ.எம்.யு. தொழில்நுட்பம் பிரேக் பிடிக்கும்போது ஒரே சீராக முன்பக்கம் மற்றும் பின்புற சக்கரங்களுக்கு விசையை பரவலாக்கும்.
சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காக முன்புறத்தில் 41 மி.மீ. யு.எஸ்.டி. போர்க் உள்ளது. அதேபோல அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் அப்சார்பர் நடுவில் உள்ளது. 286 சி.சி. திறன் கொண்ட இது 6 கியர்களைக் கொண்டது. 31.4 ஹெச்.பி. திறனும் 27.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதன் எடை 143 கிலோ மட்டுமே.
கே.டி.எம். 390 டியூக் (ரூ. 2.44 லட்சம்) மற்றும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டர் 650 (ரூ. 2.5 லட்சம்), பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர் (விலை ரூ.2.99 லட்சம்) ஆகிய மாடல்களுக்கு போட்டியாக, அந்த பைக்குகளின் விலையைவிட குறைவான விலையை ஹோண்டா நிர்ணயிக்கக் கூடும் என்று விநியோகஸ்தர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே இந்திய சாலைகளில் ஹோண்டா சி.பி.300ஆர் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை பயணம் மற்றும் சாகச பயணத்துக்கு இந்த வாகனம் எந்த வகையில் ஈடு கொடுக்கிறது என்பதையும் இந்நிறுவனம் சோதித்து வருகிறது.
Related Tags :
Next Story