கயத்தாறு அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது


கயத்தாறு அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 6 Feb 2019 6:12 PM IST (Updated: 6 Feb 2019 6:12 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.

கயத்தாறு,

கயத்தாறு அருகே ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.

ஓடை, பாதை ஆக்கிரமிப்புகள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமத்தில் தனியார் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனம் செயல்படுகிறது. இதற்காக அந்த நிறுவனம் அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களை வாங்கி, அதில் சோலார் பேனல்களை வைத்து வருகிறது. இதற்கிடையே அந்த தனியார் நிறுவனத்தினர் அப்பகுதியில் உள்ள ஓடைகளையும், பாதைகளையும் ஆக்கிரமித்ததாகவும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை மிரட்டி வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள வேப்பங்குளம், பரச்சிகுளம், பராக்கிரம பாண்டியன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு மழைக்காலங்களில் தண்ணீர் செல்லாமல், விவசாய நிலங்களில் புகுந்தது. மேலும் மற்ற விவசாயிகளின் நிலங்களுக்கு செல்வதற்கு பாதை இல்லாததால், அந்த நிலங்களையும் தனியார் நிறுவனத்திடம் குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டது.

அகற்றும் பணி

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ் மற்றும் அதிகாரிகள், தெற்கு மயிலோடையில் நிலத்தை அளவீடு செய்து ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுமார் 4 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓடைகள் மற்றும் பாதைகளை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. ஓடைகள், பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். தாசில்தார் லிங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுதா பாலமுருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story