கர்நாடகத்தை போன்று தமிழர்களுக்கு வேலை உறுதியேற்பு சட்டத்தை இயற்ற வேண்டும் தர்மபுரியில் வேல்முருகன் பேட்டி


கர்நாடகத்தை போன்று தமிழர்களுக்கு வேலை உறுதியேற்பு சட்டத்தை இயற்ற வேண்டும் தர்மபுரியில் வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2019 4:30 AM IST (Updated: 6 Feb 2019 9:23 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவை போன்று தமிழகத்தில் தமிழர்களுக்கான வேலை உறுதியேற்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

தர்மபுரி,

தமிழக அரசு பதவிகளில் 100 சதவீதத்தை தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பதவிகளில் 90 சதவீதத்தை தமிழர்களுக்கும் வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இண்டூரில் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனிரத்தினம், மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, மாநில நிர்வாகி பாபு, நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நிரப்பப்பட்ட அரசு பணியிடங்களில் 60 சதவீத பணிகளில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் இருப்பது போல தமிழகத்திலும் தமிழர்களுக்கான வேலை உறுதியேற்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை கவர்னருக்கு அனுப்பிய தீர்மானம் கிடப்பில் உள்ளது.

ஆனால், வேளாண் கல்லூரி பஸ் எரிப்பு சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரிழந்த வழக்கில் தண்டனைக்குள்ளானவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரிய செயல். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு ஓட்டுக்காக மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story