கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கு


கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கு
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 9:30 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கீதா வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரபாகர் கண்காட்சியை திறந்து வைத்து கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு உதவி கலெக்டர் (பயிற்சி) பத்மஜா மற்றும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரபாகர் பேசுகையில், அரசு போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் போது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இருக்க வேண்டும். அப்போது தான் தேர்வில் வெற்றி பெற முடியும். போட்டி தேர்வுகளுக்கு எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பத்மஜா பேசுகையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் பழைய மாதிரி கேள்வித்தாள்களை படித்து விட்டுத்தான் புத்தங்களை படிக்க வேண்டும். ஒரே கேள்வி பல மாதிரி கேட்கப்படும். கேள்விகளை நேரடியாக கேட்க மாட்டார்கள். இதற்காக படிக்கும் போதே பன்முகத் தன்மைகளை வளர்த்துக் கொள்ள வேணடும். எந்த தேர்வுக்காக படித்தாலும் பயிற்சி அவசியம். இத்தேர்வில் தோராயமாக பதில் அளிக்க முடியாது. அவ்வாறு பதில் அளித்தால் மைனஸ் மார்க் வந்து விடும். தேர்வு எழுதுவதற்கு முன் பேராசிரியர்களிடம் எப்படி தேர்வு எழுதுவது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பேசினார்.

தொடர்ந்து உதவி கலெக்டர் பிரதாப் பேசுகையில், உயர்ந்த பதவிக்கு வந்தவர்கள் கண்டிப்பாக கடின உழைப்பினால் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஸ்மார்ட் ஒர்க் அவசியம் தேவை. எதை படிக்க வேண்டும் என்பதைவிட எதை படிக்க கூடாது என்று கணிக்கத்தெரிந்திருக்க வேண்டும். நினைப்பதை உயர்வாக நினைக்க வேண்டும். தோல்வியில் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று பேசினார்.

பின்னர் நடந்த கருத்தரங்கில், உயர்கல்வியில் வேலை வாய்ப்பு குறித்து உதவி பேராசிரியர் சிவகாமியும், வங்கியில் வேலை வாய்ப்பு மற்றும் கடன் உதவி குறித்து முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கரும், சுய வேலை வாய்ப்புத்திட்டங்கள் குறித்து மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் தேவராஜும் பேசினார்கள். முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மோனிஷா நன்றி கூறினார். கருத்தரங்கில், 800-க்கும் மேற்பட்ட மூன்றாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story