கொங்கணாபுரம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியல்


கொங்கணாபுரம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம சாவு பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Feb 2019 3:45 AM IST (Updated: 6 Feb 2019 9:56 PM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவரின் உறவினர்கள் திடீரென பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எடப்பாடி, 


இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி ஊராட்சி நாச்சனூர் காட்டுவளவு அருகே ஆண் பிணம் ஒன்று நேற்று காலையில் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தியதில் இறந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோவிந்தராஜ் (வயது 38) என்பது தெரிய வந்தது. அவரின் உடலில் சிறு, சிறு காயங்கள் இருந்தன. எனவே மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன கோவிந்தராஜிக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிவில், அவரின் உறவினர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் கொங்கணாபுரம்- ஓமலூர் சாலையில் மூலப்பாதை என்ற இடத்தில் கோவிந்தராஜின் உடலை நடுரோட்டில் வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிந்தராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கோவிந்தராஜின் உடலை எடுத்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story