மாவட்ட செய்திகள்

கோதாவரி- காவிரியை இணைத்து 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் + "||" + Connecting Godavari-Kaveri 200 TMC Water will be brought to Tamil Nadu

கோதாவரி- காவிரியை இணைத்து 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும்

கோதாவரி- காவிரியை இணைத்து 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும்
‘கோதாவரி ஆற்றை காவிரி யோடு இணைத்து 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும்’ என்று கோவையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை, 

கோவையை அடுத்த வையம்பாளையத்தில் மறைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1½ கோடி செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்றுக்காலை நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார்.

விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நாராயணசாமி நாயுடு மணி மண்டபம் மற்றும் அவரது உருவச்சிலையை திறந்து வைத்தார். அவரது சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பச்சை நிற துண்டு அணிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையை அடுத்த செங்காலிபாளையத்தை சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு 1957-ம் ஆண்டு விவசாயத்திற்கு வழங்கப்பட்ட 16 மணி நேர மின்சாரம், 4 மணி நேரமாக குறைக்கப்பட்டதை எதிர்த்து, விவசாயிகளை ஒன்று திரட்டி போராடினார். இதனால் மீண்டும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேர மின்சாரத்தை பாசனத்துக்கு பெற்றுத் தந்தவர் அவர். நாராயணசாமி நாயுடுவின் நினைவை போற்றும் வகையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோவையை அடுத்த வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார். மேலும் 1970 முதல் 1980 வரை பல்வேறு விவசாயப் போராட்டங்களில் உயிர் நீத்த 40 விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு ஒட்டு மொத்தமாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார். ரூ.1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் நிலத்தில் வையம்பாளையத்தில் அமைந்துள்ள நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட மணி மண்டபத்தை ஒரு விவசாயி ஆகிய நான் திறந்து வைத்ததில் பெருமிதம் கொள் கிறேன்.

ரூ.ஆயிரத்து 652 கோடி மதிப்பீட்டில் முழுக்க, முழுக்க மாநில நிதியின் மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்குகிற போது சில பகுதிகள் விடுபட்டிருக்கின்றன. நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மேலும் அந்த விடுபட்ட பகுதி, பகுதி-2 திட்டத்தின் மூலமாக அன்னூர் மேற்கு பகுதி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஆகிய பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர் உயர, இந்தத் திட்டத்திற்கும் அரசால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் ஆங்காங்கே இருக்கிற ஏரிகள், குளங்கள் எல்லாம் ஆழப்படுத்தப்பட்டு பெய்கின்ற மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. எங்கெங்கெல்லாம் நீர் இருக்கிறதோ, அந்த நீரையெல்லாம் சேமித்து வைக்கும் அளவிற்கு இன்றைக்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற திறமையான நான்கு தலைமைப் பொறியாளர்களை நியமித்து கிட்டத்தட்ட 4 மாதம் ஆகிறது. அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு இருக்கும் நதிகள் மற்றும் ஓடைகளில் இருந்து வீணாகக் கடலிலே கலக்கின்ற நீரையெல்லாம் அங்கே தடுப்பணைகள் கட்டி சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆகவே, இது மூன்றாண்டு திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக ரூ.328 கோடி ஒதுக்கி, நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டுகிற பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு படிப்படியாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற ஓடைகள், நதிகள் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயர்கிற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தும்.

ஒரு வரலாற்றுச் சாதனையான திட்டத்தை நாங்கள் இயற்றியிருக்கிறோம். மத்திய அரசோடு தொடர்பு கொண்டு அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதை இந்த நேரத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். கோதாவரி-காவிரி இணைப்பை நிச்சயம் இந்த அரசு நிறைவேற்றித் தரும். ஆகவே, கோதாவரியில் உற்பத்தியாகிற நீர் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 டி.எம்.சி. தண்ணீர் கடலிலே கலந்து வீணாகிறது. அந்த வீணாகிற நீரை, தெலுங்கானா, ஆந்திரா மூலமாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சுமார் 200 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. அது விரைந்து செயல்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே, நீண்ட நாட்களாக விவசாயிகள் போராடி வரும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

ஏனென்று சொன்னால், ஒவ்வொரு காலகட்டத்திலும் பருவமழை பொய்க்கின்றபோது, டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அந்த விவசாயிகள் பாதிக்கப்படுகிற நிலையை மாற்றி, அதுபோல 20 மாவட்டங்களுக்கு காவிரி நீர் தான் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. ஆகவே, பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகள் நடவு செய்கிறபோது, தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடுகிறது. நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், இந்த கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலமாக நிரந்தர தீர்வு காணப்படும்.

நவீன திட்டங்களின் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்கிற காய்கறிகளை விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, சந்தை ஏற்படுத்துவதற்காக ஆங்காங்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இருக்கிற விவசாயிகள் உற்பத்தி செய்கிற காய்கறிகளை அங்கே விற்பனை செய்யலாம், ஆன்-லைனிலும் விற்பனை செய்யலாம். விளைபொருட்களுக்கு குறைந்த விலை வருகிறபோது பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளும் கட்டித் தரப்பட்டுள்ளது. விவசாய சந்தைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட காய்கறிகளையெல்லாம் ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மற்றும் விவசாயிகள் நல்ல விலைக்கு விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க, சென்னைக்கு அருகில் ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப் பூங்கா ஒன்று, தனியார் பங்களிப்போடு அமைப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு தேவையான கிட்டத்தட்ட 300 ஏக்கருக்கும் மேலான நிலம் கையகப்படுத்துவதற்கான பணி ஆய்வில் இருந்து கொண்டிருக்கிறது.

விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் அமையவிருக்கிறது. பல்வேறு வகையான பசுக்கள், ஆடுகள், கோழிகள், மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கும், விவசாயிகளுக்கு கூடுதலான விலை கிடைப்பதற்கும் இந்த ஆராய்ச்சி மையம் பயன்படும். இரவு, பகல் பாராமல், வெயில், மழை என்றும் பாராமல் உழைக்கின்ற விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என இரண்டு பேரையும் காக்கின்ற அரசாக இந்த அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கோவை அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ.10.16 கோடி செலவில் புதிய கலையரங்கம், நூலக கட்டிடம் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் காந்திபுரம், உக்கடத்தில் இருந்து வையம்பாளையத்துக்கு இரண்டு பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் சார்பில் காளை மாடுகள் வழங்கப் பட்டன.

விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், கனகராஜ், எட்டிமடை சண்முகம், வி.கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை