சாலைபாதுகாப்பு வார விழாவில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கி அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு


சாலைபாதுகாப்பு வார விழாவில் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கி அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 7 Feb 2019 3:45 AM IST (Updated: 6 Feb 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ‘ஹெல்மெட்’ கொடுத்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வேலூர், 

சாலை விபத்துகளை தடுக்க மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 4-ந் தேதி முதல் வருகிற 10-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி முதல் வேலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட போக்குவரத்து போலீஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும், விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் இனியாவது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அணுகுசாலையில் நடந்தது.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நிறுத்தினார். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கி ஹெல்மெட்’ வழங்கினார். பின்னர் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கினார். இவ்வாறாக 65 வாகன ஓட்டிகளுக்கு ‘ஹெல்மெட்’ வழங்கப்பட்டது.

அதேபோல் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சாக்லெட், ரோஜாப்பூ, பேனா ஆகியவற்றை வழங்கி தொடர்ந்து போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ஊக்குவித்தார்.

ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்யக்கூடாது, சாலைகளில் அதிக வேகத்தில் செல்லாமல் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, நாகராஜன், சுந்தரமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ‘ஹெல்மெட்’ வழங்கி விழிப்புணர்வும், போக்குவரத்து விதிகளை பின்பற்றியவர்களுக்கு ரோஜாப்பூ, சாக்லெட், பேனா கொடுத்து ஊக்குவித்தது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Next Story